ரூ 200 கோடிப்பே"…! அரசு நிலத்தை வாங்கி ஏமாந்த நெடுஞ்சாலை ஆணையம்..! சி.பி.ஐ விசாரிக்க பரிந்துரை

0 8608
ரூ 200 கோடிப்பே"…! அரசு நிலத்தை வாங்கி ஏமாந்த நெடுஞ்சாலை ஆணையம்..! சி.பி.ஐ விசாரிக்க பரிந்துரை

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 2004 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்திய போது  போலி ஆவணங்கள் மூலம், அரசு புறம்போக்கு நிலத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு விற்று  சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியாக பணம் பெற்றதாக தொழில் அதிபர் ஆசிஷ் ஜெயின் மற்றும் இரு அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்வதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள பீமன்தாங்கல் கிராமத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அப்போது சென்னை அசோக் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஆஷிஷ் மேத்தா என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்ட 7 புள்ளி 67 ஏக்கரில் இருந்து இரண்டரை ஏக்கர் நிலத்தைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கையகப்படுத்தியது. ஆனால் உண்மையில் அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என்றும், அது மட்டுமல்லாமல் சுமார் 82 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை அவர் போலியாகப் பட்டா தயாரித்து தன் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து 200 கோடி ரூபாய் இழப்பீடாக பெற்று மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000 ஆவது ஆண்டில் உதவி செட்டில்மென்ட் அதிகாரியாக இருந்த சண்முகம் என்பவர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே உள்ள வேறு கிராமங்களின் சர்வே எண்களைப் பயன்படுத்தி இதற்கான போலி ஆவணங்களைத் ஆஷின் மேத்தாவுக்கு தயாரித்து கொடுத்துள்ளார். இதற்கு அப்போதைய ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் என்பவர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகின்றது.

அரசு நிலத்தை அரசிடமே கொடுத்து 200 கோடியை விழுங்கிய இந்த மெகா மோசாடியை கடந்த ஆண்டு சர்வே இயக்குநர் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி குறித்து தற்போதைய திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், இந்த மோசடிக்குத் துணையாக இருந்த முன்னாள் வட்டாட்சியர் ராதாகிருஷ்னன், உதவி செட்டில்மென்ட் அதிகாரி சண்முகம் மற்றும் குறிப்பிட்ட ஆஷிஷ் மேத்தா ஆகியோர் மீது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மோசடி, போலி ஆவனம் தயாரித்தல் 7 பிரிவுகளில் மோசடி வழக்குப் பதிவு செய்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் ஆஷிஷ் மேத்தா இரு அரசு அதிகாரிகளின் துணையுடன் போலி ஆவனங்கள் மூலம் 2000ஆவது ஆண்டில் பட்டா வாங்கிய நிலையில் , அவரது நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக 18 ஆண்டுகள் கழித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அவருக்கு 200 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. இந்த மெகா மோசடி அம்பலமான நிலையில், பீமன்தாங்கல் கிராமத்தைச் சுற்றியுள்ள நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா குறித்து முழுமையான விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் இப்போது உத்தரவிட்டுள்ளது. இது பெரிய அளவிலான மோசடி என்பதால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக நில நிர்வாக ஆணையர் பங்கஜ் குமார் பன்சால் பரிந்துரைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments